3039.துடித்தன கடக் கரி;
     துடித்தன பரித் தேர்;
துடித்தன முடித் தலை; துடித்தன
     தொடித் தோள்;
துடித்தன மணிக் குடர்; துடித்தன
     தசைத் தோல்;
துடித்தன கழல்-துணை; துடித்தன
     இடத் தோள்.

    கடக் கரி - மதயானைகள்; துடித்தன - (இராமபாணங்களால்)
பதைத்து விழுந்தன; பரித்தேர் - குதிரைகள் பூட்டப் பெற்ற தேர்கள்;
துடித்தன - துள்ளித் துடித்துக் கீழே விழுந்தன; முடித்தலை துடித்தன -
பொன் முடியணிந்த தலைகள் பதறி விழுந்தன; தொடித் தோள் -
தொடியென்னும் வளைகள் பூண்ட அரக்கரின் தோள்கள்; துடித்தன -
துடித்தன; மணிக் குடர் துடித்தன- அன்னவரின் சிறுகுடல்களும் துடித்தன;
தசைத் தோல் துடித்தன - தசையோடு பொருந்திய தோல்களும் துடித்தன;
கழல் துணை துடித்தன - இரண்டு கால்களும் துடித்தன; இடத் தோள்
துடித்தன -
இடப் புறத்துத் தோள்களும் துடித்தன.

     தேர் துடித்தல் - தேர் துள்ளிக் கீழே விழுந்ததைக் குறிக்கிறது -
முறிந்து விழுதல்.இடத்தோள் துடித்தன - சாகாத அரக்கர்களின் இடத்தோள்
துடித்தன - ஆடவர்க்கு இடத்தோள்துடித்தல் தீ நிமித்தமாம்.

     சொற்பொருட் பின்வருநிலையணி - துடித்தன : பன்முறை ஒரே
பொருளில் அடுக்கி வந்தது.                                    165