3040. | வாளின் வனம், வேலின் வனம், வார் சிலை வனம், திண் தோளின் வனம், என்று இவை துவன்றி, நிருதப் பேர் ஆளின் வனம் நின்றதனை, அம்பின் வனம் என்னும் கோளின் வன வன் குழுவினின், குறைபடுத்தான். |
வாளின் வனம் - வாட்படைகளின் தொகுதியும்; வேலின் வனம் - வேற்பைடையின் தொகுதியும்; வார் சிலை வனம் - விற்படைகளின் தொகுதியும்; திண் தோளின் வனம் - வலிய தோள்களின் தொகுதியும்; என்று இவை துவன்றி - ஆகிய இவை போதும் நெருங்கப் பெற்று; நிருதப் பேர் ஆளின் வனம் நின்றதனை - அரக்க வீரர்களின் பெரிய தொகுதி எதிர் நின்றதை; அம்பின் வனம் என்னும் - (இராமன்) தன் அம்புகளின் தொகுதியென்று சொல்லக் கூடிய; கோளின் வன வன் குழுவினின் - கொலைத் தொழிலையுடைய அழகான வலிய கூட்டத்தால்; குறை படுத்தான் - துணித்து வீழ்த்தினான். வாள் முதலிய படைக்கலங்களோடு எதிர் நின்ற அரக்கர்களின் தொகுதியை இராமபிரான் தன்னுடைய அம்புகளால் துணித்திட்டான் என்பது. வனம் - அடர்ந்த வலிய தொகுதி : (மிகுதி) பெரு மழையால் வனங்கள் அழிதல் போல அழிந்தன என்பது குறிப்பு. 166 |