3041. | தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான் மீன் உருவும்; மேருவை விரைந்து உருவும்; மேல் ஆம் வான் உருவும்; மண் உருவும்; 'வாள் உருவி வந்தார் ஊன் உருவும்' என்னும் இது உணர்த்தவும் உரித்தோ? |
தான் உருவு கொண்ட தருமம் - தருமமே ஒரு மனித வடிவம் கொண்டாற் போன்ற இராமபிரான்; தெரி சரம் தான் - தேர்ந்தெடுத்து எய்த அம்புதான்; மீன் உருவும் - நட்சத்திரங்களையும் ஊடுருவிச் செல்லும்; மேருவை விரைந்து உருவும் - மேரு மலையையும் விரைவாகப் புகுந்து உருவிச் செல்லும்; மேல் ஆம் வான் உருவும் - மேலேயுள்ள வான மண்டலத்தையும் உருவிச் செல்லும்; மண் உருவும் - பூமியையும் உருவித் துளைத்துச் செல்லும்; (என்றால்); வாள் உருவி வந்தார் - வாளையுருவிக் கொண்டு போரிட வந்த அரக்கர்களின்; ஊன் உருவும் என்னும் இது - உடம்பை ஊடுருவிச் செல்லுமென்பது; உணர்த்தவும் உரித்தோ - எடுத்துக் கூறுவதற்கும் உரியதோ? (ஆகாது). நட்சத்திரம் முதலியவற்றைத் தடையற முழுதும் துளைத்துச் செல்லவல்ல கூரிய வேகமுள்ள இராமபாணம் அரக்கருடலைத் துளைத்ததென்பது தானே விளங்கும் என்றவாறு. தான் உருவு கொண்ட தருமம் - அறமூர்த்தியான இராமன். 167 |