3042. அன்று இடை வளைத்தவர்
     குலங்களொடு அடங்கச்
சென்று உலைவுறும்படி,
     தெரிந்து கணை சிந்த,
மன்றிடை நலிந்து
     வலியோர்கள் எளியோரைக்
கொன்றனர், நுகர்ந்த பொருளின்,
     கடிது கொன்ற

    அன்று இடை வளைத்தவர் - அப்பொழுது தன்னைச் சூழ்ந்த
அரக்கர்கள்; குலங்களொடு அடங்க - தத்தம் கூட்டங்களோடு ஒரு சேர;
சென்று உலைவு உறும்படி- அழிந்து போகும்படி; கணை தெரிந்து சிந்த-
இராமபிரான் அம்புகளை ஆராய்ந்தெடுத்துச் செலுத்த (அந்த அம்புகள்);
வலியோர்கள் - வலிமை மிக்கவர்; எளியோரை - எளியவர்களை;
மன்றிடை நலிந்து கொன்றனர் - வெளியிடத்தில் வருத்திக் கொன்று;
நுகர்ந்த பொருளின் - (அவர்களிடமிருந்து கவர்ந்து) தாம் அனுபவித்த
(அவர்களை விரைவில் அழிக்கும்) செல்வம் போல; கடிது கொன்ற -
விரைவாகக் கொன்றன.

     வலியவர் தம்மினும் எளியவரை வருத்தி அவரிடமிருந்து கவர்ந்த
பொருள் அவ் வலியவரை நாசப்படுத்துமென்பது. நலிந்து கொள்வதற்கு
ஏற்ற இடமாதல் குறித்து மன்றைக் கூறினார்.                       168