3043. | கடுங் கரன் எனப் பெயர் படைத்த கழல் வீரன், அடங்கலும் அரக்கர் அழிவுற்றிட, அழன்றான்; ஒடுங்கல் இல் நிணக் குருதி ஓதம்அதில் உள்ளான் நெடுங் கடலில் மந்தரம் என, தமியன் நின்றான். |
கடுங் கரன் எனப் பெயர் படைத்த - கொடிய கரன் என்று பேர் பெற்ற; கழல் வீரன் - வீரக் கழல் பூண்ட வீரன்; அரக்கர் அடங்கலும் அழிவு உற்றிட - அரக்கரெல்லோரும் (போரில்) அழிவடைய; அழன்றான் - சினங் கொண்டான்; ஒடுங்கல் இல் - குறைவில்லாத; நிணக் குருதி ஓதம் அதில் - கொழுப்போடு கூடிய இரத்த வெள்ளத்தினிடையே; உள்ளான் - உள்ளவனான கரன்; நெடுங் கடலில் மந்தரம் என - பெரிய கடலினிடையே மந்தர மலை போல; தமியன் நின்றான் - தனித்தவனாக நின்றான். அரக்கர் எல்லோரும் போரில் அழிவெய்திட, நிணக் குருதி வெள்ளத்தில் நிற்கும் கரன் பாற்கடலைக் கடையும்பொழுது, அதனிடையில் நின்ற மந்தர மலை என்னும் மத்துப் போன்றவன் என்றார். 169 |