இராமன்முன் கரன் எதிர்ப்படல் 3044. | செங் கண் எரி சிந்த, வரி வில் பகழி சிந்த, பொங்கு குருதிப் புணரியுள், புகையும் நெஞ்சன்- கங்கமொடு காகம் மிடைய, கடலின் ஓடும் வங்கம் எனல் ஆயது ஒரு தேரின்மிசை-வந்தான். |
புகையும் நெஞ்சன் - சினத்தீ மூளும் மனமுடைய அந்தக் கரன்; செங்கண் எரி சிந்த - சிவந்த கண்கள் நெருப்புப் பொறியைச் சொரியவும்; வரிவில் பகழி சிந்த - கட்டமைந்த வில் அம்புகளைப் பொழியவும்; பொங்கு குருதிப் புணரியுள் - மேலே பொங்கியெழுகின்ற இரத்தக் கடலிலே; கங்கமொடு காகம் மிடைய - கழுகுகளும் காக்கைகளும் நெருங்க; கடலில் ஓடும் வங்கம் எனல் ஆயது - கடலிலே விரைந்து செல்லும் கப்பலென்று உவமை சொல்லுமாறு; ஒரு தேரின் மிசை வந்தான்- ஒரு தேரின் மேல் வந்தான். கங்கம் - கழுகு கங்கமொடு காகம் - இவை பிணங்களைத் தின்னும் பொருட்டுப் போர்க் களத்திற்கு வந்தவை. இது கரனுக்குத் தீ நிமித்தமுமாம். குருதி வெள்ளமாக அமைந்ததற்கேற்ப அதனிடையே செல்லும் தேர் வங்கமாக உவமிக்கப் பெற்றது. 170 |