3046. தீ உருவ, கால் விசைய,
     செவ்வியன, வெவ் வாய்
ஆயிரம் வடிச் கணை
     அரக்கர்பதி எய்தான்;
தீ உருவ, கால் விசைய,
     செவ்வியன, வெவ் வாய்
ஆயிரம் வடிக் கணை
     இராமனும் அறுத்தான்.

     தீ உருவ - நெருப்புப் போன்ற வடிவையுடையனவும்; கால் விசைய-
காற்றைப் போல வேகம் உள்ளனவும்; செவ்வியன - பிற இலக்கணங்கள்
எல்லாம் அமைந்தவையுமான; வெவ் வாய் வடிக்கணை ஆயிரம் -
கொடிய வாயையும் கூர்மையுமுடைய ஆயிரம் அம்புகளை ஏவி; அரக்கர்
பதி எய்தான் -
அரக்கர் தலைவனான கரன் இராமன் மேல் தொடுத்தான்;
தீ உருவ, கால் விசைய செவ்வியன - அவ்வாறே நெருப்புப் போன்ற
வடிவுடையனவும் காற்றுப் போல வேகமுள்ளவையும் சிறப்புடையனவும்;
வெவ் வாய் - கொடிய நுனிகளையுடையனவுமான; ஆயிரம் வடிக்கணை
-
ஆயிரம் கூரிய அம்புகளைத் தூண்டி; இராமனும் அறுத்தான் -
இராமபிரானும் துணித்தான்.

     கரன் வரும் போதே ஆயிரம் அம்புகளை எய்ய இராமபிரானும்
அத்தகைய கணைகளால் அவற்றையறுத்தான் என்பது. கரன் கணை
செலுத்தியதையும் இராமன் அவற்றைத் துணித்ததையும் ஒரே தொடர்களால்
குறித்தது. போர் உத்தியில் சமநிலை காட்டப் போலும்.               172