3047. | ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான், ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும், எய்தான்; சூழ் சுடர் வடிக் கணை அவற்று எதிர் தொடுத்தே, ஆழி வரி விற் கரனும், அன்னவை அறுத்தான். |
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் - ஏழு வகையான உலகங்களுக்கெல்லாம் ஒப்பற்ற நாயகனான இராமபிரானும்; ஊழி எரியின் கொடிய - ஊழிக் காலத்து உலகையழிக்க வல்ல நெருப்பைக் காட்டிலும் கொடுமையுடையனவாய்; பாய் பகழி ஒன்பான் - பாய்ந்து செல்லும் ஒன்பது பாணங்களை; எய்தான் - (கரன்மேல்) தொடுத்தான்; ஆழி வரிவிற் கரனும் - வட்டமாக வளைந்த வில்லையுடைய கரன் என்னும் அரக்கனும்; சுடர் சூழ் வடிக் கணை - ஒளி பரவும் கூரிய (ஒன்பது) அம்புகளை; அவற்று எதிர் தொடுத்து - அந்தக் கணைகளுக்கு எதிராகச் செலுத்தி; அன்னவை அறுத்தான் - அந்த அம்புகளைத் துணித்தான்; ஏ - அசை. ஏழுலகினுக்கு ஒரு நாயகன் - கீழேழு, மேலேழு ஆகிய பதினான்கு உலகங்களுக்கும் தலைவனாகிய இராமபிரான். 'செம்மாண் தனிக்கோல் உலகேழினும் செல்ல நின்றான்' (168) எனத் தயரதன் சிறப்பிக்கப் பெற்றமையால் அவனுக்குப் பின் அவன் மைந்தனான இராமபிரானுக்கும் அவ்வுரிமையுடைமை காரணமாகவும் கூறப் பெற்றது எனலாம். 173 |