3048. | கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான்; வள்ளல் உருவைப் பகழி மாரியின் மறைத்தான்; உள்ளம் உலைவுற்று, அமரர் ஓடினர் ஒளித்தார்; வெள் எயிறு இதழ்ப் பிறழ, வீரனும் வெகுண்டான். |
(அவ்வாறு அம்புகளால் இராமபாணங்களை அறுத்த கரன்) கல்வியின்- (தான் கற்றறிந்த) வித்தையினால்; கள்ள மாய வினை அமர் - வஞ்சகம் நிறைந்த மாயப் போர்; விளைத்தான் - செய்தான்; பகழி மாரியின் - (தான் எய்த) அம்பு மழையால்; வள்ளல் உருவை மறைத்தான் - இராமபிரானின் திருமேனியை மறையச் செய்தான் (அதைக் கண்ட); அமரர் உள்ளம் உலைவுற்று - தேவர்கள் மனத்தில் நடுக்கமுற்று; ஓடினர் ஒளித்தார் - ஓடியொளிந்து கொண்டார்கள்; வீரனும் - மாவீரனான இராமபிரானும்; வெள் எயிறு இதழ்ப் பிறழ - தன் வெண்மையான பற்கள் உதட்டின் மேல் விளங்க (பற்களால் உதட்டைக் கடித்தவாறு); வெகுண்டான்- கோபங் கொண்டான். தேவர்களும் அஞ்சி நடுங்குமாறு கரன் மாயப் போரால் இராமனின் திருமேனியை அம்பு மழையால் மறையச் செய்தான் என்பது. கல்வி : கற்ற வித்தை மந்திரம். கள்ள மாய வினையமர் : தனது உண்மையுரு மறைந்தும், வேறு வேறு பல வடிவங் கொண்டும் நின்று பல வகையாகச் செய்யும் போர். 174 |