இராமன் பிடித்த வில் ஒடிதலும் வானவர் ஏங்கி அஞ்சுதலும் கலிவிருத்தம் | 3049. | 'முடிப்பென் இன்று, ஒரு மொய் கணையால்' எனா, தொடுத்து நின்று, உயர் தோள் உற வாங்கினான்; பிடித்த திண் சிலை, பேர் அகல் வானிடை இடிப்பின் ஓசை பட, கடிது இற்றதே. |
'இன்று - இப்பொழுது; ஒரு மொய் கணையால் - ஏவிய அம்பு ஒன்றாலே; முடிப்பென்' எனா - இவனையழிப்பேன் என்று மனங் கொண்டு; நின்று தொடுத்து - (இராமன்) நிலை நின்று ஓர் அம்பை வில்லிலே பூட்டி; உயர் தோள் உற வாங்கினான் - உயர்ந்த தன் தோளையளாவும்படி (வில்லின் நாணியை) வலிய இழுத்தான்; (அப்போது); பிடித்த திண் சிலை - (இராமன்) கையில் பிடித்திருந்த வலிய வில்லானது; பேர் அகல் வான் இடை இடிப்பின் - அகன்ற பெரிய வானத்திலுண்டாகும் இடி முழக்கம் போன்ற; ஓசை பட - ஓசையுண்டாகுமாறு; கடிது இற்றது - விரைவிலே ஒடிந்தது. ஏ : ஈற்றசை. இவனையழிப்பேனென்று இராமன் கணை தொடுத்து வில்லை வளைக்கும் பொழுது இடி போலப் பேரொலியெழ அந்த வில் முறிந்தது என்பது. 175 |