3050. | வெற்றி கூறிய வானவர், வீரன் வில் இற்ற போது, துணுக்கம் உற்று ஏங்கினார்; மற்று ஓர் வெஞ் சிலை இன்மை மனக் கொளா, 'அற்றதால் எம் வலி' என, அஞ்சினார். |
வெற்றி கூறிய வானவர் - (இராமபிரானின்) வெற்றியைப் புகழ்ந்து சொல்லி்க் கொண்டிருந்த தேவர்கள்; வீரன் வில் இற்ற போது - இராமபிரானின் வில் ஒடிந்தபொழுது; துணுக்கம் உற்று ஏங்கினார் - நடுக்கமுற்று வருந்தினார்கள்; மற்று ஓர் வெம்சிலை இன்மை மனக் கொளா - (அந்த இராமனுக்கு) வேறொரு கொடிய வில் இல்லாததை மனத்திலே கொண்டு; எம் வலி அற்றது என அஞ்சினார் - எமது வலிமையொழிந்தது என்று அச்சங் கொண்டனர். ஆல் - அசை. இராமபிரானின் வில் ஒடிந்ததால் இனி அரக்கர்க்கே வெற்றியென்றும், அதனால் தமக்கு உதவி செய்வார் வேறு இல்லாமையறிந்து தம் வலிமையற்றது என்றும், இனி அரக்கரால் பெரிதும் இடருற வேண்டுமென்றும் அஞ்சினார் வானவர் என்பது. மற்றொரு வெஞ்சிலையின்மை மனக் கொளா - சேம வில்லொன்று துணையில்லாததைக் கருதி. 176 |