வருணன் கொடுத்த வில்லை இராமன் பெறுதல் 3051. | என்னும் மாத்திரத்து, ஏந்திய கார்முகம் சின்னம் என்றும், தனிமையும், சிந்தியான்; மன்னர் மன்னவன் செம்மல், மரபினால், பின் உறத் தன் பெருங் கரம் நீட்டினான். |
என்னும் மாத்திரத்து - அவ்வாறு (இராமனது வில்) ஒடிந்த அளவிலே; மன்னவர் மன்னவன் செம்மல் - அரசர்களுக்கு அரசனான தசரத மன்னனின் மகனான இராமன்; ஏந்திய கார்முகம் சின்னம் என்றும்- (தான்) பிடித்திருந்த வில் துணிபட்டதென்பதையும்; தனிமையும் - (தான்) தனித்திருக்கும் தன்மையையும்; சிந்தியான் - மனத்தில் கருதாது; மரபினால் - பழைய போரின் மரபுப் படி; தன் பெருங் கரம் பின் உற நீட்டினான் - தனது நீண்ட கையைப் பின்புறம் செல்லுமாறு நீட்டினான். தனிமை - வில்லாகிய துணையொன்றும் இல்லாமை. இராமன் முன்பு பரசுராமனிடம் தான் பெற்ற விட்டுணுதனுசை வருணனிடத்தில் கொடுத்து, அதனை நன்றாகப் பாதுகாத்து வைத்திருக்கும்படியும் உரிய சமயத்தில் கொண்டு வந்து கொடுக்குமாறும் வேண்டியிருந்தானாதலின் அக் குறிப்பால் வில் ஒடிந்தது குறித்து மனந் தளராமல் அந்த வில்லின் வரவுக்காகப் பின்னே கைந் நீட்டினான் என்பார் 'மரபினால் பின்னுறத் தன் பெருங்கரம் நீட்டினான்' என்றார். 177 |