3052. கண்டு நின்று, கருத்து
     உணர்ந்தான் என,
அண்டர் நாதன் தடக்
     கையில், அத் துணை,
பண்டு போர்
     மழுவாளியைப் பண்பினால்
கொண்ட வில்லை,
     வருணன் கொடுத்தனன்.

    வருணன் - (வானத்திலிருந்து வந்து போரைப் பார்த்து நின்ற) வருண
தேவன்; கண்டு நின்று - (இராமன் பின்னால் கையை நீட்டியதைப்) பார்த்து
நின்று; கருத்து உணர்ந்தான் என - (அப் பெருமானின்) மனக் கருத்தை
யறிந்தவனாகி; பண்ட போர் மழு வாளியை - முன்பு போர்க்கு உரிய
கருவியாக மழுவைக் கொண்டவனான பரசுராமனிடமிருந்து; பண்பினால்
கொண்ட வில்லை -
(இராமன்) உரிமையால் கொண்ட விட்டுணுதனுசு
என்னும் வில்லை; அத் துணை - அச் சமயத்தில்; அண்டர் நாதன் தடக்
கையில் -
தேவர்களுக்குத் தலைவனான இராமபிரானின் நெடிய கரத்திலே;
கொடுத்தனன் - கொடுத்திட்டான்.

     மழுவாளி - மழுவையாள்பவன், பரசுராமன்.                  178