3053.கொடுத்த வில்லை, அக்
     கொண்டல் நிறத்தினான்
எடுத்து வாங்கி, வலம் கொண்டு,
     இடக் கையில்
பிடித்த போது, நெறி
     பிழைத்தோர்க்கு எலாம்
துடித்தவால், இடக்
     கண்ணொடு தோளுமே.

    கொடுத்த வில்லை - (வருணன் கொடுத்த அந்த வில்லை; அக்
கொண்டல் நிறத்தினான் -
நீர் கொண்ட மேகம் போன்ற கரிய
நிறத்தையுடைய இராமபிரான்; எடுத்து - கையில் ஏந்தி; வலம் கொண்டு
வாங்கி -
வலிமையால் வளைத்து; இடக் கையில் பிடித்த போது - இடக்
கையால் பிடித்த பொழுது; நெறி பிழைத்தோர்க்கு எலாம் - தரும
நெறியிலிருந்து தவறிய அரக்கர் எல்லோர்க்கும்; இடக் கண்ணொடு
தோளும் துடித்த -
இடக் கண்ணும் இடத்தோளும் துடித்தன;

     ஆல். ஏ : அசைகள். வாங்குதல் - வளைத்தல். ஆடவர்க்கு
இடக்கண்ணும் தோளும் துடித்தல் தீய நிமித்தம். கொண்டல் - தொழிலாகு
பெயர்.                                                    179