3055. | எந்திரத் தடந் தேர் இழந்தான்; இழந்து, அந்தரத்திடை ஆர்த்து எழுந்து, அம்பு எலாம் சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும் மந்தரத்தில் மழையின் வழங்கினான். |
(கரன்) எந்திரத் தடந் தேர் இழந்தான் - வலிய சக்கரம் பூண்ட தனது பெரிய தேரை இழந்தான்; இழந்து - (அவ்வாறு) தேரையிழந்ததனால்; ஆர்த்து அந்தரத்திடை எழுந்து - ஆரவாரம் செய்து கொண்டு வானத்திலே கிளம்பி; சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும் மந்தரத்தில் - அழகிய ஒப்பற்ற வில்லையுடைய இராமபிரானின் தோளாகிய மந்தர மலையின் மேல்; மழையின் - மழை பொழிந்தாற் போல; அம்பு எலாம் வழங்கினான் - (தன்) அம்புகளையெல்லாம் சொரிந்தான். தேரை இழந்த அரக்கனான கரன் வானத்தில் ஆர்த்தெழுந்து இராமனுடைய தோள் மேல் மழை போல அம்புகளைச் சொரிந்தான் என்பது. அந்த அம்புகள் இராமனின் தோள்களுக்குச் சிறிதும் அழிவுண்டாக்காமையை 'மந்தரத்தில் மழையின்' என்னும் உவமை விளக்கும். மந்தரம் பாற்கடலைக் கலக்கியது; அது போல இராமனின் தோள் அரக்கர் சேனைக் கடலைக் கலக்குவதென்பார் 'தோளெனும் மந்தரத்தின்' என்றார். 181 |