3056. தாங்கி நின்ற
     தயரத ராமனும்,
தூங்கு தூணியிடைச்
     சுடு செஞ் சரம்
வாங்குகின்ற வலக்
     கை ஓர் வாளியால்,
வீங்கு தோளொடு
     பாரிடை வீழ்த்தினான்.

    தாங்கி நின்ற தயரத ராமனும் - (கரன் சொரிந்த அம்புகளைத் தன்
மேல் விழாதபடி) தடுத்து நின்ற தசரதனின் மைந்தனான இராமபிரானும்;
தூங்கு தூணியிடை - (தோளில்) கட்டப்பட்ட அம்பறாத் தூணியிலிருந்து;
சுடு செஞ்சரம் வாங்குகின்ற - வெம்மையான சிவந்த அம்புகளையெடுத்து
விடுகின்ற; வலக் கை - அக்கரனின் வலக்கையை; வீங்கு தோளொடு -
பருத்த தோள்களோடு; ஓர் வாளியால் பாரிடை வீழ்த்தினான் - ஓர்
அம்பினால் துண்டித்து நிலத்தின் மேல் விழச் செய்தான்.

     இராமனும் கரனது அம்பு வாங்கும் வலக் கையை ஓர் அம்பினால்
தோளோடும் வீழ்த்தினான் என்பது. தூங்குதல் - தொங்குதல்; வாங்குதல் -
வெளியே எடுத்தல்.                                          182