3057. | வலக் கை வீழ்தலும், மற்றைக் கையால் வெற்றி உலக்கை, வானத்து உரும் என, ஓச்சினான்; இலக்குவற்கு முன் வந்த இராமனும் விலக்கினான், ஒரு வெங் கதிர் வாளியால். |
வலக்கை வீழ்தலும் - (தனது) வலக்கை வெட்டுண்டு கீழே விழுந்தவுடனே; மற்றைக் கையால் - (கரன்) இடக் கையினால்; வெற்றி உலக்கை - வெற்றி தரக் கூடிய உலக்கையை; வானத்து உரும் என - மேகத்தினிடையே தோன்றும் இடியைப் போல; ஓச்சினான் - உயரே எடுத்து (இராமன் மேல்) வீசினான்; இலக்குவற்கு முன் வந்த இராமனும் - இலக்குவனுக்கு முன்னே பிறந்த இராமனும்; ஒரு வெம் கதிர் வாளியால் - கொடிய ஒளியுடைய ஓர் அம்பினால்; விலக்கினான் - (தன் மேல் படாதவாறு) தடுத்து விலக்கினான். வலக் கையை இழந்த கரன் இடக்கையால் உலக்கையை இராமன் மேல் எறிய, அவ் இராமனும் ஓர் அம்பினால் அதைத் தடுத்தான் என்பது. இலக்குவற்கு முன் வந்த இராமன் : இரட்டுற மொழிதலால் இலக்குவனுக்கு முன்னே பிறந்த இராமன் எனவும், போர்க்கெழுந்த இலக்குவனைத் தடுத்து அவனுக்கு முன்னே வந்த இராமன் எனவும் பொருள் கொள்ளலாம். 183 |