3058. | விராவரும் கடு வெள் எயிறு இற்றபின், அரா அழன்றது அனைய தன் ஆற்றலால் மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான்; இராமன் அங்கு ஓர் தனிக் கணை ஏவினான். |
விராவரும் - பொருந்தியுள்ள; கடு வெள் எயிறு - விடத்தையுடைய தன் வெண்மையான பற்கள்; இற்றபின் - முறிபட்ட பின்பு; அரா அழன்றது அனைய - நாகப் பாம்பு சீறியதைப் போன்ற; தன் ஆற்றலால்- தனது வல்லமையால்; மராமரம் கையில் வாங்கி - (கரன்) ஒரு மராமரத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு; வந்து எய்தினான் - (இராமனருகே) நெருங்கி வந்தான்; இராமன் அங்கு - இராமன் அப்பொழுது; ஓர் தனி கணை ஏவினான் - ஒப்பற்ற ஓர் அம்பினை அவன் மேல் செலுத்தினான். வலக்கையும், உலக்கையும் அறுபட்ட பின்பும் கரன் சீறி வந்த வல்லமைக்கு விடப் பற்கள் முறிந்த பின்பு நாகப் பாம்பு சீறுதலை உவமை கூறினார். விரா வரும் ஒரு சொல். விராவ அரு எனப் பிரித்து அருகில் நெருங்கவொண்ணாத கடு என்றும் பொருள் கொள்ளலாம். இம் மூன்று பாடல்களிலும் காப்பியத் தலைவனின் பெயர் தொடர்ந்து ஒவ்வொரு விதமாக வந்துள்ளது. 184 |