3059. | வரம் அரக்கன் படைத்தலின், மாயையின், உரமுடைத் தன்மையால், உலகு ஏழையும் பரம் முருக்கிய பாவத்தினால், வலக் கரம் என, கரன் கண்டம் உற்றான்அரோ. |
வரம் படைத்தலின் - வரங்கள் பெற்றுள்ளமையாலும்; மாயையின் - மாயைகளைக் கொண்டுள்ளமையாலும்; உரம் உடைத் தன்மையால் - வலிமையைப் பெற்றுள்ளமையாலும்; அரக்கன் - அரக்கனான இராவணன்; உலகு ஏழையும் - ஏழுலகத்து உயிர்களையும்; பரம் முருக்கிய - மிகுதியாக அழித்த; பாவத்தினால் - தீவினையால்; கரன் வலக்கரம் என- கரன் முன்பு வலக்கை துணிக்கப்பட்டது போல; கண்டம் உற்றான் - இப்பொழுது தனது கழுத்தறுபட்டான். அரோ - ஈற்றசை. மிகப் பெருஞ் சேனைக்குத் தலைவனாய் மிக்க வலியவனாக இராவணனுக்குத் தம்பி முறையில் நின்ற கரன் அழிந்தது இராவணனின் மிக்க வருத்தத்துக்கும் வலிமைக் குறைவிற்கும் காரணமாதலைக் கொண்டு வர பலமும், மாயா பலமும், உடல் வலிமையும் ஆகிய இவ் வலிமைகளால் இராவணன் எல்லாவுலகத்தையும் நலிந்த தீவினையால் கரன் அழிந்தான் என்றார். கழுத்து அறுபட்டதற்குக் கையறுபட்டதையுவமை கூறினார். கரன் இராவணனுக்கு வலக்கரம் போன்றவன். என்று குறிப்பு நயம் காண்க. 185 |