வானவர் மகிழ்தல்

3060. ஆர்த்து எழுந்தனர்,
     ஆடினர், பாடினர்,
தூர்த்து அமைந்தனர், வானவர்
     தூய் மலர்;
தீர்த்தனும் பொலிந்தான்,
     கதிரோன் திசை
போர்த்த மென் பனி
     போக்கியது என்னவே.

    (அப்பொழுது) வானவர் - தேவர்கள்; ஆர்த்து எழுந்தனர் -
ஆரவாரஞ் செய்து எழுந்து; ஆடினர் பாடினர் - ஆடிப் பாடிக் கொண்டு;
தூய்மலர் தூர்த்து - தூய்மையான கற்பக மலர்களை (இராமன் மேல்)
பொழிந்து; அமைந்தனர் - நின்றார்கள்; தீர்த்தனும் - தூயவனான
இராமபிரானும்; திசை போர்த்த - திசையெங்கும் மூடிய; மென் பனி -
மென்மையான பனியை; கதிரோன் - சூரியன்; போக்கியது என்ன -
போக்கி விளங்கியது போல; பொலிந்தான் - (பகையழித்து) விளங்கினான்.

     கதிரவன் திசையெங்கும் கவிந்த பனியைப் போக்குவது போல
இராமன் தன்னைச் சூழ்ந்த அரக்கர் கூட்டத்தை எளிதில் விரைவிலே
அழித்தான் என்பது. இதில் இராமனைக் கதிரவனாகவும் போரில்
சூழ்ந்திருந்த அரக்கர்களை மென்பனியாகவும் உவமித்தார்.           186