3062. | விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில் புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக, அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும் கண்ணின் நீரினில் பாதம் கழுவினார். |
விண்ணில் நீங்கிய - போரில் இறந்து வீரசுவர்க்கம் அடைந்த; வெய்யவர் மேனியில் - கொடிய அரக்கர்களின் உடலில் ஏற்பட்ட; புண்ணின் நீரும் - புண்களிலிருந்து வந்த இரத்தமும்; பொடிகளும் - (அந்தப் போர்க் களத்திலுள்ள) தூசிகளும்; போய் உக - நீங்கிவிடும்படி; அண்ணல் வீரனை - பெருமை மிக்க வீரனாகிய இராமபிரானை; தம்பியும் அன்னமும் - இலக்குவனும் சீதையும்; கண்ணின் நீரினால் - (தங்கள்) கண்ணீரால்; பாதம் கழுவினார் - திருவடிகளைக் கழுவினார்கள். இராமன் மீண்டு வருகையில் இலக்குவனும் சீதையும் அவ் இராமனின் திருவடிகளில் விழுந்து வணங்கும்போது அவர் தம் கண்களிலிருந்து பெருகிய ஆனந்தக் கண்ணீர் அத் திருவடிகளில் வழிந்தமை அரக்கரின் இரத்தமும் போர்க்களப் புழுதியும் அத் திருவடிகளில் படிந்திருந்தவற்றை நீர் கொண்டு கழுவுதல் போலுமென்பது தற்குறிப்பேற்றவணி. அன்னம் : உவமவாகுபெயர். 188 |