3063. மூத்தம் ஒன்றில், முடிந்தவர்
     மொய் புண்ணீர்
நீத்தம் ஓடி, நெடுந்
     திசை நேர் உற
கோத்த வேலைக் குரல்
     என, வானவர்
ஏத்த, வீரன இனிது
     இருந்தான் அரோ.

    மூத்தம் ஒன்றில் - ஒரு முகூர்த்த நேரத்திலே; முடிந்தவர் - இறந்த
அந்த அரக்கர்களின்; மொய் புண் நீர் நீத்தம் - மிகுதியாகத் திரண்ட
இரத்த வெள்ளம்; ஓடி - ஓடிச் சென்று; நெடுந்திசை நேர் உற - நெடிய
திசைகளின் எல்லையில் சேர்ந்திட; வீரன் - இராமபிரான்; கோத்த
வேலைக் குரல் என -
கோத்தாற் போன்ற (அலைகள் ஒழுங்குபட்ட)
கடலினது முழக்கம் போல; வானவர் ஏத்த - தேவர்கள் துதி செய்து
ஆரவாரிக்க; இனிது இருந்தான் - இனிமையாக இருந்தான்.

     அரோ : ஈற்றசை. தேவர்கள் துதித்ததால் எழுந்த ஒலி கடல் ஒலித்தல் போலும் என்பது.

     மூத்தம் : முகூர்த்தம் - இரு நாழிகைப் பொழுது என்பர்.        189