சூர்ப்பணகை அழுது புலம்பி, இலங்கைக்கு ஏகுதல் 3064. | இங்கு நின்றது உரைத்தும்: இராவணன் தங்கை தன் கை, வயிறு தகர்த்தனள்; கங்குல் அன்ன கரனைத் தழீஇ, நெடும் பொங்கு வெங் குருதிப் புரண்டாள் அரோ. |
இங்கு நின்றது - இவ்விடத்தில் (சொல்லாமல்) எஞ்சி நின்ற செய்தியை; உரைத்தும் - இனிச் சொல்லுவோம்; இராவணன் தங்கை - இராவணன் தங்கையான சூர்ப்பணகை; தன் கை வயிறு தகர்த்தனள் - தன் கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு; கங்குல் அன்ன கரனைத் தழீஇ - இருளையொத்த மேனியையுடைய கரனைத் தழுவி; நெடும் பொங்கு வெம் குருதிப் புரண்டாள் - மேலே பொங்கியெழுந்த நெடிய வெப்பமான இரத்த வெள்ளத்தில் விழுந்து புரண்டாள். அரோ : ஈற்றசை. கரன் என்றது அவனது உயிர் நீத்த உடலை. தழீஇ சொல்லிசையளபெடை. வயிறு தகர்த்தல் - சோகமுற்ற மகளிரின் இயல்பு. 190 |