3065. | 'ஆக்கினேன் மனத்து ஆசை; அவ் ஆசை என் மூக்கினோடு முடிய, முடிந் திலேன் வாக்கினால், உங்கள் வாழ்வையும் நாளையும் போக்கினேன்; கொடியேன்' என்று போயினாள். |
மனத்து - என் மனத்தில்; ஆசை ஆக்கினேன் - (இராமன்பால்) ஆசையை வளர்த்தேன்; அவ் ஆசை - அந்த (வேண்டாத) ஆசை; என் மூக்கினோடு முடிய - என் மூக்கு முதலியன அறுபட்டதோடு முடிந்தொழிய; முடிந்திலேன் - (அவ்வளவில்) இறந்து படாத நான்; வாக்கினால் - என் வாய்ச் சொற்களால்; உங்கள் வாழ்வையும் நாளையும் போக்கினேன் - உங்களுடைய வாழ்க்கையையும் வாழ்நாளையும் ஒழித்தேன்; கொடியேன் - (ஆதலால்) மிகவும் கொடியவளாவேன்; என்று போயினாள் - என்று புலம்பிக் கொண்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றாள். நான் இராமன்பால் ஆசை வைத்தேன்; அத் தகாத ஆசை என்னுடைய மூக்கு ஆகியவற்றைப் போக்கிற்று; அதனால் நாணமுற்று எனது உயிரைப் போக்கியிருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு இறந்திடாமல் 'எம்மவரே' இராமலக்குவரின் உயிரைப் போக்குங்கள் என்று உங்களை ஏவி, உங்கள் செல்வ வாழ்வையும், உயிர் வாழ்க்கையையும் ஒழிக்கக் காரணமானேன்; ஆகையால் நான் கொடியவள்' என்று தன்னை நொந்தவாறு சூர்ப்பணகை சென்றாள் என்பது. 191 |