3066. | அலங்கல் வேற் கை அரக்கரை ஆசு அறக் குலங்கள் வேர் அறுப்பான் குறித்தாள், உயிர் கலங்கு சூறை வன் போர் நெடுங் கால் என, இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள். |
அலங்கல் வேற் கை அரக்கரை - வெற்றி மாலையணிந்த வேலைக் கையிலே கொண்ட அரக்கர்களை; குலங்கள் ஆசு அற வேர் அறுப்பான்- குலங்கள் அடியோடு ஒழிய வேரறுக்கும் பொருட்டு; குறித்தாள் - எண்ணினவளாய் (சூர்ப்பணகை); உயிர் கலங்கு வன் போர் சூறை நெடுங் கால் என - உலகத்து உயிர்கள் கலங்கியழிதற்குக் காரணமான வன்மையாகத் தாக்கும் பெரிய சூறாவளியைப் போல; நொய்தின் சென்று - விரைவாகச் சென்று; இலங்கை மா நகர் எய்தினாள் - இலங்கை மாநகரை அடைந்தாள். சூர்ப்பணகை இலங்கை சென்று, சீதையைத் தான் கவரத் தொடங்கியது முதல் கரன் முதலியோர் சேனையோடும் மடிந்தமை ஈறாகவுள்ள செய்திகளைக் கூறுதல் - உடனே இராவணன் வந்து சீதையையெடுத்துப் போதற்கும் அது இராவணன் முதலான அரக்கர்களின் நாசத்திற்கும் காரணமாதல் பற்றி இவள் சென்று செய்தி கூறக் கருதுவதை மற்றை யரக்கரையும் அழிக்கக் கருதியதாக நினைந்து, அரக்கரை ஆசறக் குலங்கள் வேரறுப்பான் குறித்தாள்' என்றார். தற்குறிப்பேற்றவணி. 192 |