சூர்ப்பணகை வரும்பொழுது, இராவணன் இருந்த நிலை

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3067. இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை
     மறந்தனள், போர் இராமன் துங்க
வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை
     மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,
திரைப் பரவைப் பேர் அகழித் திண்
     நகரில் கடிது ஓடி, 'சீதை தன்மை
உரைப்பென்' எனச் சூர்ப்பணகை வர, இருந்தான்
     இருந்த பரிசு உரைத்தும் மன்னோ.

    இரைத்த நெடும் படை அரக்கர் - ஆரவாரம் செய்த பரந்த பெரிய
படையுடைய (கரன் முதலாகிய) அரக்கர்கள்; இறந்ததனை மறந்தனள் -
மடிந்தொழிந்ததை (சூர்ப்பணகை) மறந்து போனாள்; போர் இராமன் -
போர்த் திறத்தில் சிறந்த இராமபிரானுடைய; துங்கவரைப் புயத்தினிடை -
உயர்ந்த மலைகளைப் போன்ற தோள்களின் இடத்து; கிடந்த பேர் ஆசை-
(தான் கொண்ட) மிக்க ஆசை; மனம் கவற்ற - மனத்தை வருத்துதலால்;
ஆற்றாள் ஆகி - (அத்துன்பத்தைப்) பொறுத்துக் கொள்ளாதவளாய்;
திரைப் பரவைப் பேர் அகழி - அலை கடலையே பெரிய அகழியாகக்
கொண்ட, திண் நகரில் - வலிமை வாய்ந்த இலங்கை நகருக்குள்; கடிது
ஓடி -
விரைந்தோடி வந்து; 'சீதை தன்மை உரைப்பென்' என -
சீதையின் அழகுச் சிறப்பை (இராவணனுக்குக்) கூறுவேன் என்று
எண்ணியவளாய்; சூர்ப்பணகை வர - சூர்ப்பணகை வந்த போது;
இருந்தான் இருந்த பரிசு - அங்கிருந்த இராவணன் (அரசவையில்)
வீற்றிருந்த கோலத்தை; உரைத்தும் - சொல்லுகின்றோம். (மன் ஓ -
அசைகள்).

     இராமன் அழகில் கொண்ட காமத்தால் எண்ணற்ற வீரர்களின்
மரணத்தையும் மறந்தாள் இராமனை அடைவதற்குச் சீதையே தடையெனக்
கருதி அவளைக் குறித்துத் தமையனிடம் பேச அவள் மறக்கவில்லை என்ற
குறிப்பை உணர்த்துகின்றார். நில அரண், மலை அரண். காட்டரண் என்ற
வரிசையில் நீர் அரண் இயற்கையாகவே அமைந்திருந்ததைத் திரைப்
பரவைப் பேரகழி' என்பதனால் சுட்டினார்.

     முதன் முதல் இராவணன் அறிமுகமாகும் இடமாகையால் பின்னர்
ஏற்படவிருக்கும் வீழ்ச்சிக்கு முரணாக நகரின் திண்மையும், இராவணன்
மாட்சி மிக்க வீற்றிருப்பும் சொல்லத் தொடங்குகின்றார்.               1