3068. | நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது, நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல் உலைவு இலா வகை இழைத்த தருமம் என, நினைந்த எலாம் உதவும் தச்சன் புலன் எலாம் தெரிப்பது, ஒரு புனை மணி மண்டபம் அதனில் பொலிய மன்னோ, |
நிலை இலா - நிலையற்றதான; உலகினிடை - உலகத்தில்; நிற்பனவும் - (இடம் பெயராது) நிலை நிற்கும் இயல்புடைய தாவரப் பொருள்களையும்; நடப்பனவும் - (இடம் பெயரும் இயல்பினவான) சங்கமப் பொருள்களையும்; நெறியின் ஈந்த - முறையாகப் படைத்த; மலரின் மேல் நான்முகற்கும் - (திருமாலின்) உந்திக் கமலத்தின் மேலமர்ந்த பிரமனுக்கும்; வகுப்பு அரிது - படைத்தற்கு அரியதாகவும்; நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல் - நுட்பமாக அறிகிற ஒப்பற்றதும் அளவற்றதுமாகிய வல்லமையால்; உலைவு இலா வகை இழைத்த - (தமக்கும் பிறர்க்கும்) தீமை தராத வகையில் செய்யப் பெற்ற; தருமம் என - அறத்தினைப் போன்று; நினைந்த எலாம் உதவும் - நினைத்த அனைத்தையும் நினைத்தபடியே உண்டாக்கித் தரவல்ல; தச்சன் - தெய்வத் தச்சனாகிய விசுவகர்மாவின்; புலன் எலாம் - சிற்ப நூலறிவு முழுவதையும்; தெரிப்பது - எடுத்துக் காட்டுவதாகிய; ஒரு - ஒப்பற்ற; புனை மணி மண்டபம் அதனில் - மணிகள் குயிற்றிச் செய்யப் பெற்ற சபை மண்டபத்திலே; பொலிய - (தன் வீற்றிருக்கையால்) அம் மண்டபம் அழகு பெறுமாறும்...(மன் ஓ - அசைகள்). இப்பாடல் முதல் இருபத்திரண்டு பாடல்களில் வினையெச்சங்களாகத் - (பொலிய, வயங்க, குலவ என்றாற் போல) தொடர்ந்து இருபத்து மூன்றாம் பாடலில் இருந்தனன் என்னும் வினைமுற்றால் பொருள் முடிவு எய்துகின்றது. இராவணனின் மணி மண்டபம் தெய்வத் தச்சனின் அறிவுத் திறமெலாம் புலப்படுத்துவது; அதன் மேலும் அதன் சிறப்பை வரம்பு இலா ஆற்றல் கொண்டதும் எவர்க்கும் தீமை தராத வகையில் செய்யப் பெற்றதுமான அறத்தை உவமையாக்கிப் புலப்படுத்திய பாங்கு நினையத்தக்கது. நான்முகனாலும் படைத்தற்கு அரியது; தெய்வத் தச்சன் புலன் எலாம் தெரிப்பது மண்டபத்தின் சிறப்பு. அம் மண்டபத்தில் வீற்றிருப்பதால் இராவணனுக்குப் பொலிவு என்பதனை உணர்த்தப் 'பொலிய' எனச் சுட்டினார். 2 |