3069. | புலியின் அதள் உடையானும், பொன்னாடை புனைந்தானும், பூவினானும் நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு யாவர், இனி நாட்டல் ஆவார்? மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள், சேயரிக் கண், வென்றி மாதர் வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ. |
தேவரின் - தேவர்களுக்குள்ளே; புலியின் அதள் உடையானும் - புலியின் தோலை ஆடையாக உடுத்த சிவபெருமானும்; பொன்னாடை புனைந்தானும் - பொன் மயமான பீதாம்பரத்தை அணிந்துள்ள திருமாலும்; பூவினானும் - உந்தித் தாமரையில் வசிக்கும் பிரமனும்; நலியும் வலத்தார் அல்லர் - (இராவணனை) வருத்தும் வலிமையுடையவர் ஆகமாட்டார்; இங்கு - இவ்வுலகத்தில்; இனி யாவர் நாட்டல் ஆவார் - இனிமேல் வேறு எவர் (இராவணனை) வெல்லுதற்குக் குறித்தவர் ஆவார்! (எவரும் இல்லை), மேலும்; மெலியும் இடை - மெல்லியதாய் விளங்கும் இடையும்; தடிக்கும் முலை - பருத்துத் தோன்றும் மார்பகங்களையும்; வேய் இளந்தோள் - மூங்கிலுக்கு நிகரான இளம் தோள்களையும்; சேய் அரிக் கண் - சிவந்த வரிகளை உடைய கண்களையும்; வென்றி மாதர் - எவரையும் வெல்லும் தன்மையையும் கொண்ட மகளிரது; வலிய நெடும் புலவியினும் - உறுதியான நீண்ட ஊடற் காலத்தும்; வணங்காத - தாழ்வுறாத; மகுடநிரை - மணிமுடிகளின் வரிசை; வயங்க - ஒளி வீசித் துலங்கவும்....(மன், ஓ - அசைகள்). இராவணன் திரிமூர்த்திகளாலும் வெல்லுதற்கு அரிய வர பலமுடையவன் என்பதை முதலிரண்டு அடிகளாற் கூறினார். மகளிர் ஊடற் காலத்துக்கும் வணங்க மாட்டான் என்பதைப் பின்னிரண்டு அடிகளால் உணர்த்தினார். இரணியன், 'என், வாளினைத் தொழுவதல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ' என இரணியன் வதைப் படலத்தில் (6334) கூறுதல் ஒப்பு நோக்கற்குரியது. 'மெலியுமிடை தடிக்கு முலை' - தொடை முரண். 3 |