3070. வண்டு அலங்கு நுதல் திசைய வயக் களிற்றின்
     மருப்பு ஒடிய அடர்த்த பொன்-தோள்
விண் தலங்கள் உற வீங்கி, ஓங்கு உதய
     மால் வரையின் விளங்க, மீதில்
குண்டலங்கள், குல வரையை வலம் வருவான்
     இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை
மண்டலங்கள் பன்னிரண்டும், நால்-ஐந்து ஆய்ப்
     பொலிந்த என வயங்க மன்னோ,

    வண்டு அலங்கு நுதல் - வண்டுகள் மொய்க்கின்ற நெற்றியினை
உடையனவும்; திசைய - எட்டுத் திக்குகளில் உள்ளனவும் (ஆகிய) ; வயக்
களிற்றின் -
வலிமை மிக்க யானைகளின்; மருப்பு ஒடிய - கொம்புகள்
முறியும்படி; அடர்த்த பொன்தோள் - வன்மையுறத் தாக்கிய அழகிய
தோள்கள்; விண் தலங்கள் உற வீங்கி - வான் அளாவும் படி
பருத்துயர்ந்து; ஓங்கு உதய மால் வரையின் விளங்க - மேல் வளர்ந்த
பெரிய உதய பருவதம் போல் ஒளி வீசவும்; மீதில் குண்டலங்கள் -
(அத்தோள்களின்) மேலே (செவியிலிருந்து தொங்கும்) குண்டலங்கள்
(இருபதும்); கொழுங் கதிர்க் கற்றை சூழ் - வளமான கிரணங்கள் செறிந்து
சூழ்ந்த; இரவி மண்டலங்கள் பன்னிரண்டும் - கதிரவன் மண்டலங்கள்
பன்னிரண்டும்; குல வரையை வலம் வருவான் - (மலைக் குலத்தில்
உயர்ந்த) மேரு மலையை வலமாய் வர; நால் - ஐந்து ஆய்ப் பொலிந்த
என -
இருபதாய் விளங்கின என; வயங்க - ஒளி வீசவும்...(மன், ஓ -
அசைகள்)

     இராவணன் திக்கு விசயப் பொழுதில் திசை யானைகளோடு பொருத,
அவற்றின் கொம்புகள் இவன் தோள்களின் வலிமையால் முறிந்தன என்பர்.
ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம், சார்வ
பௌமம், சுப்பிரதீகம் என்பன எட்டுத் திசை யானைகள். சூரியர்
பன்னிருவர் : தாதா, இந்திரன், அரியமா, மித்திரன், வருணன், அம்சுமான்,
பர்ஜன்யன், பகன், விவசுவான், பூஷா, விட்டுணு, துவஷ்டா ஆகியோர்.

     தோள் உதய பருவதம் போன்றிருத்தல் உவமையணி. பன்னிரு சூரியர்
இராவணனின் இருபது குண்டலங்களாய் நின்றாற் போலிருந்தனர் என்பது
தற்குறிப்பேற்ற அணி.                                           4