3071. | வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க, வயிரக் குன்றத் தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற, ஆன்ற நாள் எலாம் புடை தயங்க, நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட கோள் எலாம் கிடந்த நெடுஞ் சிறை அன்ன நிறை ஆரம் குலவ மன்னோ. |
வாள் உலாம் முழு மணிகள் - ஒளி வீசுகின்ற (அணிகலன்களில் பதித்த) பெரிய இரத்தினங்கள்; வயங்கு ஒளியின் தொகை - விளங்கும் ஒளிப் பிழம்பை; வழங்க - பெரிதும் வீசியளிக்கவும்; வயிரக் குன்றத் தோள் எலாம் - உறுதி வாய்ந்த மலை போன்ற தோள்கள் யாவும்; படி சுமந்த விட அரவின் - பூமியைச் சுமக்கும் நஞ்சு மிக்க ஆதிசேடனாகிய பாம்பரசனின்; பட நிரையின் தோன்ற - ஆயிரம் படங்களின் வரிசை போல் திகழவும்; ஆன்ற நாள் எலாம் - பெருமைக்குரிய விண்மீன்கள் யாவும்; புடை தயங்க - பக்கங்களில் விளங்கும் வண்ணம்; நாம நீர் இலங்கையில் - அச்சம் தருகின்ற கடல் நீரால் சூழப்பட்ட இலங்காபுரியில்; தான் நலங்க விட்ட - (அவ்விராவணன்) தான் அடைத்து விட்ட; கோள் எலாம் - கிரகங்கள் எல்லாம்; கிடந்த - தங்கியிருந்த; நெடுஞ் சிறை அன்ன - பெரிய சிறைச் சாலையைப் போன்ற; நிறை ஆரம் - நிறைந்த சன்ன வீரம் என்னும் இரத்தின மாலை; குலவ - விளங்கித் தோன்றவும்..... (மன், ஓ - அசைகள்). இராவணனின் வலிமையால் அவன் நவக்கிரகங்களையும் கட்டி வைத்த ஆற்றலை அவனைக் குறித்த வருணனையிலேயே இணைத்துக் கூறினார். இப்பாடலின் பின்னிரண்டு அடியும் தற்குறிப்பேற்ற அணி. 5 |