கலிவிருத்தம் 3072. | ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர் நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால், தேய்வுறத் தேய்வுறப் பெயர்ந்து, செஞ் சுடர் ஆய் மணிப் பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே, |
செஞ்சுடர் ஆய்மணி - சிவந்த ஒளி படைத்த தேர்ந்தெடுத்த மாணிக்கங்கள் பதிக்கப் பெற்ற; பொலன் கழல் - பொன்னால் ஆகிய வீரக் கழல்; ஆய்வு அரும் பெருவலி - (இவ்வளவினதென்று) ஆராய்தற்கரிய பெரிய வலிமையை உடைய; அரக்கர் ஆதியோர் - இராக்கதர்கள் முதலானவர்களுடைய; நாயகர் நளிர்மணி மகுடம் - தலைவர்களின் பெருமைக்குரிய மணிகள் பதித்த கிரீடங்கள்; நண்ணலால் - (அவர்கள் வணங்கும் போதெல்லாம்) வந்து தன் மேற்படுதலால்; தேய்வு உறத் தேய்வுற - தேய்வினை அடையுந்தோறும், பெயர்ந்து - புதிய ஒளியை மீண்டும் பெற்று; அடிநின்று ஆர்ப்ப - (தன்) பாதங்களில் பொருந்தி ஒலிக்கவும்.... (ஏ - அசை) இது முதல் ஆறு கவிகள் பல்வகைத் தேவரும் இராவணன் அவையில் பணிந்து நிற்றலைக் கூறுகின்றன. 6 |