3074. இன்னபோது இவ் வழி
     நோக்கும் என்பதை
உன்னலர், கரதலம்
     சுமந்த உச்சியர்,
மின் அவிர் மணி முடி
     விஞ்சை வேந்தர்கள்
துன்னினர், முறை முறை
     துறையில் சுற்றவே,

    மின் அவிர் மணி முடி - மின்னலென ஒளி விரிக்கும் மணிகள்
பொருந்திய மகுடம் சூடிய; விஞ்சை வேந்தர்கள் - வித்தியாதர மன்னர்கள்;
இன்ன போது இவ் வழி நோக்கும் என்பதை - இன்ன நேரம் இந்தப்
பக்கம் (இராவணன்) நோக்குவான் என்பதை; உன்னலர்- அறியாதவர்களாய்;
கரதலம் சுமந்த உச்சியர் - (எப்போதும் தங்கள்) கரங்களைத் தலைமேற்
சுமந்தவர்களாய்; துன்னினர் - நெருங்கி நின்று; முறை முறை - வரிசை
வரிசையாக; துறையில் சுற்ற - அவை மண்டபத்தே சூழ்ந்து நிற்கவும்....
(ஏ- அசை).

     இராவணன் பார்வை படப் பரிதவித்துக் காத்து நிற்கும் வித்தியாதர
வேந்தர் நிலை கூறப்பட்டது. உன்னலர், உச்சியர் - முற்றெச்சங்கள்.      8