3075. மங்கையர்திறத்து ஒரு
     மாற்றம் கூறினும்,
தங்களை ஆம் எனத்
     தாழும் சென்னியர்,
அங்கையும் உள்ளமும்
     குவிந்த ஆக்கையர்,
சிங்க ஏறு என, திறல்
     சித்தர் சேரவே.

    மங்கையர் திறத்து - (ஏவல்) மகளிரின் பால்; ஒரு மாற்றம்
கூறினும் -
ஏதேனும் கட்டளை மொழியினும்; தங்களை ஆம் என -
(இராவணன்) தங்களிடம் கூறிய தாம் என்று; தாழும் சென்னியர் -
வணங்கும் தலையினையும்; அங்கையும் உள்ளமும் - அழகிய கையும்
மனமும்; குவிந்த ஆக்கையர் - வளைந்த உடம்பினையும்
(உடையவர்களாய்); சிங்க ஏறு எனத் திறல் சித்தர் - ஆண் சிங்கம்
போன்ற சித்தர்கள்; சேர - திரண்டு நிற்கவும்..... (ஏ - அசை).

     சித்தர்கள் ஒரு தேவ சாதியார் : தவப் பேராற்றலால்
சித்தர்களானோரும் இராவணன் அவையிலே அவன் தவப் பெருக்கத்தால்
சிறியோராயினர்.                                               9