3077.பிரகர நெடுந் திசைப்
     பெருந் தண்டு ஏந்திய
கரதலத்து அண்ணலைக்
     கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என,
     நடுங்கும் நாவினர்,
உரகர்கள், தம் மனம்
     உலைந்து சூழவே.

    பிரகர - (பாவியரைத்) தண்டனை புரியும்; நெடுந்திசை - (தெற்குப்)
பெருந்திசைக்குரிய; பெருந்தண்டு ஏந்திய கரதலத்து - பெரிய கால
தண்டம் ஏந்திய கரம் படைத்த; அண்ணலை - தலைவனாம் யமனை;
கண்ணின் நோக்கிய - கண்ணெதிரே கண்ட; நரகினர் ஆம் என -
நரகவாசிகள் போல; உரகர்கள் - நாகராசர்கள்; தம் மனம் உலைந்து -
தம் உள்ளம் சோர்ந்து; நடுங்கும் நாவினர் - (இராவணைக் கண்டு) வாய்
குழறியவர்களாய்; சூழவே - சூழ்ந்து நிற்கவும்....(ஏ - அசை).

     ப்ரஹரம் - அடித்தல் எனும் பொருள் உடைய வட சொல். இராவணனின் கொடுமை உணர்த்த எமன்என்றார்.                  11