3078. | திசை உறு கரிகளைச் செற்று, தேவனும் வசையுறக் கயிலையை மறித்து, வான் எலாம் அசைவுறப் புரந்தரன் அடர்த்த தோள்களின் இசையினைத் தும்புரு இசையின் ஏத்தவே. |
திசை உறு கரிகளை - எட்டுத் திக்குகளிலும் உள்ள யானைகளை (திக்கயங்களை); செற்று - வென்று; தேவனும் வசையுற - சிவபெருமானும் பழியேற்கும்படி; கயிலையை மறித்து - மேரு மலையைப் பெயர்த்து; வானெலாம் அசைவுற - விண்ணுலகம் நடுங்க; புரந்தரன் அடர்த்த - இந்திரனை நெருங்கிப் போரிட்ட; தோள்களின் - (இருபது) தோள்களினது; இசையினை - புகழை; தும்புரு - தும்புருவென்னும் கந்தருவன்; இசையின் ஏத்த - (வீணை) இசையோடு புகழவும்....(ஏ - அசை). இராவணன் வெற்றித் தோள்களைத் தும்புரு என்னும் கந்தருவன் இசை பாடிப் புகழ்ந்தமை கூறினார். தும்புரு நாரதன் போலும் முனிவன். அவன் வீணை கலாவதி. 12 |