3079.சேண் உயர் நெறி முறை
     திறம்பல் இன்றியே
பாணிகள் பணி செய,
     பழுது இல் பண் இடை
வீணையின் நரம்பிடை
     விளைத்த தேமறை,
வாணியின், நாரதன்,
     செவியின் வார்க்கவே.

    சேண் உயர் - தொலைவிலுள்ள விண்ணுலகில் மேம்பட்ட; நெறி
முறை -
இசை விதிகளின் ஒழுங்கு; திறம்பல் இன்றி - தவறுதல்
இல்லாமல்; பாணிகள் - கைகள்; பணி செய - (இசைத் தானங்களில்)
உரிய தொழில் செய்ய; வீணையின் நரம்பிடை விளைத்த - வீணையின்
நரம்புகளில் தடவி எழுப்பிய; பழுது இல் பண் இடை - குற்றமில்லாத
இராகத்தில்; தே மறை - இனிய வேதத்தை; நாரதன் - நாரத மாமுனி;
வாணியின் - கலைமகளைப் போல; செவியின் வார்க்க - காதுகளில்
பொழிய....(ஏ - அசை).

     இராவணன் கேட்டு மகிழ வீணை தடவிச் சாம வேத கீதம் நாரதன்
இசைத்தான். தே மறை என்றலால் சாம வேதமாயிற்று. நாரதன் - ஆத்ம
ஞானம் அளிப்பவன்; மனிதர் ஒற்றுமை கெடுப்பவன் என்றும் பொருள்
கூறுவர். அவன் வீணையின் பெயர் மகதீ. (சரசுவதி வீணை - கச்சபி).    13