3080. | மேகம் என் துருத்தி கொண்டு, விண்ணவர் தருவும் விஞ்சை நாகமும் சுரந்த தீந் தேன் புனலொடும் அளாவி, நவ்வித் தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும் சீகர மகர வேலைக் காவலன், சிந்த மன்னோ, |
விண்ணவர் தருவும்- தேவர்களின் கற்பக மரங்கள் தரும் மலர்களும்; விஞ்சை நாகமும் - வித்தியாதரர்களின் சிறந்த மரங்களின் மலர்களும்; சுரந்த தீந்தேன் - சொரியும் இனிய தேனை; புனலொடும் அளாவி - நன்னீரோடு கலந்து; மேகம் என் துருத்தி கொண்டு - முகில்களாகிற வீசு குழலில் எடுத்துக் கொண்டு; மகர வேலைக் காவலன் - சுறா மீன்கள் நிரம்பிய கடலுக்குத் தலைவனாகிய வருணன்; நவ்வித் தோகையர் துகிலில் தோயும்- (இராவணன் அவையிலுள்ள) மானும் மயிலும் போன்ற மகளிரது ஆடைகளில் படியும்; என்பது ஓர் துணுக்கத்தோடும் - என்னும் ஓர் அச்சத்தோடு; சீகரம் சிந்த - சிறு துளிகளாகச் சிதறவும்........(மன்; ஓ - அசைகள்). தரு, நாகம் என்பன மரங்கள்; இங்கு முதலாகு பெயர்களாய் மலர்களைச் சுட்டின. அவைக்களத்திலுள்ள மகளிர் ஆடையை நனைத்து விடுமோ என்று அஞ்சினான். இப்பாடல் முதல் ஆறு கவிகள் நீர்க் கடவுள் முதலியோர் நீர் தெளித்தல் முதலிய பணிவிடைகள் செய்தலைக் கூறும். 14 |