கலிவிருத்தம் 3082. | மின்னுடை வேத்திரக் கையர், மெய் புகத் துன் நெடுங் கஞ்சுகத் துகிலர், சோர்விலர், பொன்னொடு வெள்ளியும், புரந்தரா தியர்க்கு இன் இயல் முறை முறை இருக்கை ஈயவே, |
மின்னுடை வேத்திரக் கையர் - மின்னல் போல் ஒளி வீசும் பொற்பிரம்பு ஏந்தியவர்களாய்; மெய் புகத்துன் - உடல் முழுதும் முடி நெருங்கிய; நெடுங் கஞ்சுகத் துகிலர் - நீண்ட சட்டையைத் தரித்தவர்களாய்; பொன்னொடு வெள்ளியும் - தேவகுரு வியாழனும், அசுர குரு வெள்ளியும்; புரந்தராதியர்க்கு - இந்திரன் முதலிய தேவர்களுக்கு; சோர்விலர் - தளர்ச்சியில்லாதவர்களாய்; முறை முறை - தக்க வரிசைப்படி; இருக்கை இன் இயல் ஈய - ஆசனங்களை இனிய தன்மையோடு காட்டி அமரச் செய்தனர்.....(ஏ - அசை). 16 |