3085. | அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து, நல் புதிது அலர் கற்பகத் தருவும், பொய் இலாக் கதிர் நெடு மணிகளும், கறவை ஆன்களும், நிதிகளும், முறை முறை நின்று, நீட்டவே, |
நல் புதிது அலர் கற்பகத் தருவும் - சிறந்த புத்தம் புது மலர்களைக் கொண்ட கற்பக மரங்களும்; பொய் இலாக் கதிர் நெடு மணிகளும் - தவறுதல் இல்லாத ஒளி உமிழும் பெரிய (சிந்தாமணி போன்ற) தேவரத்தினங்களும்; கறவை ஆன்களும் - பால் சுரக்கும் (காமதேனு போன்ற) பசுக்களும்; நிதிகளும் - தேவருலகில் உள்ள (சங்கநிதி பதுமநிதி போன்ற) பெரு நிதிக் குவியல்களும்; அதிசயம் அளிப்பதற்கு - (இராவணனுக்கு) வியப்பை அளிக்கும் முறையில்; அருள் அறிந்து - (அவன்) அன்பு காட்டும் நேரமறிந்து; முறை முறை நின்று நீட்ட - வரிசை வரிசையாய் நின்று தம் பரிசுகளை வழங்கவும் .. (ஏ - அசை). இராவணன் அருள் காட்டுவார்க்கு இத்தேவர் உலகச் செல்வங்கள் அவ்வப்போது பரிசுகள் பொழிந்தன எனவும் கூறலாம். கற்பகத் தரு - சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், அரிசந்தனம் என ஜந்து; தேவமணிகள் - சிந்தாமணி, சூளாமணி; பசுக்கள் காமதேனுவும் அதன் கன்றான நந்தினியும்; நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் என ஒன்பது. 19 |