3086.குண்டலம் முதலிய குலம்
     கொள் பேர் அணி
மண்டிய பேர் ஒளி
     வயங்கி வீசலால்,
'உண்டுகொல் இரவு, இனி
     உலகம் ஏழினும்?
எண் திசை மருங்கினும்
     இருள் இன்று' என்னவே,

    குண்டலம் முதலிய - குண்டலம் தொடங்கி அமைந்த; குலம் கொள்
பேரணி -
பல்வேறு வகையினவாகிய சிறந்த அணிகலன்கள்; மண்டிய
பேர் ஒளி -
திரண்ட மிக்க ஒளியை; வயங்கி வீசலால் - (எங்கும்)
விளங்கும்படி வீசுவதால்; இனி உலகம் ஏழினும் - இனி மேல் ஏழு
உலகங்களிலும்; இரவு உண்டு கொல் - இருள் செறிந்த பொழுதும்
உண்டாகுமோ?; எண்திசை மருங்கினும் - எட்டுத் திக்குகளின்
பக்கங்களிலும்; இருள் இன்று என்ன - இருள் காண முடியவில்லையே
என்று கூறும் படியாகவும்.....(ஏ - அசை).

     ஏழு உலகமாவன- பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர் லோகம்,
ஜன லோகம், தபோ லோகம், சத்ய லோகம் என மேல் ஏழும், அதல, விதல,
கதல, தராதல ரசாதல, மகாதல, பாதலம் எனக் கீழ் ஏழுமாம்.           20