3088. | ஊருவில் தோன்றிய உயிர் பெய் ஓவியம் காரினில் செருக்கிய கலாப மஞ்ஞைபோல், வார் விசிக் கருவியோர் வகுத்த பாணியின், நாரியர், அரு நடம் நடிப்ப, நோக்கியே, |
ஊருவில் தோன்றிய - (நாராயண முனிவனது) தொடையினின்றும் பிறந்து; உயிர்பெய் ஓவியம் - உயிர் நிரம்பிய ஓவியம் போன்ற ஊர்வசி முதலான; நாரியர் - பெண்கள்; வார் விசிக் கருவியோர் வகுத்த பாணியின் - தோல் கயிற்றால் கட்டப்பட்ட இசைக் கருவியாளர்கள் அமைக்கும் தாள ஒழுங்கிற்கேற்ப; காரினில் செருக்கிய கலாப மஞ்ஞை போல் - மேகங்களைக் கண்டு உவகை பூண்ட தோகை மயில்களைப் போல; அருநடம் நடிப்ப - அருமையான நடனத்தை ஆட; நோக்கி - அதனைப் பார்த்தவாறும்........ (ஏ - அசை). பாணியின் ஆரியர் என்று பாடங்கொண்டு ஆரியக் கூத்து எனப் பொருள் கூறலும் உண்டு.22 |