3089.இருந்தனன் - உலகங்கள் இரண்டும்
     ஒன்றும், தன்
அருந் தவம் உடைமையின்,
     அளவு இல் ஆற்றலின்
பொருந்திய இராவணன்,
     புருவக் கார்முகக்
கருந் தடங் கண்ணியர்
     கண்ணின் வெள்ளத்தே.

    தன் அருந்தவம் உடைமையின் - தன்னுடைய அரிய தவ வலிமைப்
பேற்றினால்; உலகங்கள் இரண்டும் ஒன்றும் - மூன்று உலகங்களையும்;
அளவு இல் ஆற்றலின் பொருந்திய - (தன்) வரம்பிலா வலிமையோடு
தன் கீழ்ப் பொருந்தும்படி பெற்ற; இராவணன் - இலங்கை வேந்தனாகிய
இராவணன்; புருவக் கார்முகக் கருந்தடங் கண்ணியர் - வில் போன்ற
புருவங்களையும் கரிய பெரிய கண்களையும் உடைய மாதர்களின்;
கண்ணின் வெள்ளத்தே - பார்வைப் பெருக்கினிடையே; இருந்தனன் -
வீற்றிருந்தான்.

     கோகர்ண ஆசிரமத்தில் ஒவ்வொரு தலையாய் அரிந்திட்டு ஓமம்
செய்த பெருந்தவத்தால் வரபலம் பெற்றவன் இராவணன். முன்
இருபத்திரண்டு செய்யுள்களின் பொருள் இச் செய்யுளால் முடிவுற்றது.
விஞ்சை வேந்தர் சுற்ற, சித்தர் சேர, கின்னரர் இறைஞ்ச, உரகர் சூழ,
தும்புரு ஏத்த, நாரதன் வார்க்க, வருணன் சிந்த, சமீரணன் துடைப்ப, வியாழ
வெள்ளிகள் இருக்கை ஈய, காலன் நாழிகைக் கணக்குக் கூற, அக்கினி
விளக்கேற்ற, கற்பகத்தரு முதலியன செல்வம் நீட்ட, அணிகள் இருளை
ஓட்ட, கடவுட் கன்னியர் வாழ்த்த, ஊர்வசி முதலியோர் ஆட, இராவணன்
தோளும் குண்டலமும் ஒளி வீச, மகுடம் பிரகாசிக்க, ஆரம் குலவ, கழல்
ஆர்ப்ப, மலர்க்குப்பை துன்ன, மண்டபம் பொலிய, பார்வை வெள்ளத்து
வீற்றிருந்தான் என முடிக்க.                                    23