சூர்ப்பணகையின் வருகை கண்ட இலங்கையர் துயரம் 3090. | தங்கையும், அவ் வழி, தலையில் தாங்கிய செங் கையள், சோரியின் தாரை சேந்து இழி கொங்கையள், மூக்கிலள், குழையின் காதிலள், மங்குலின் ஒலி படத் திறந்த வாயினள், |
அவ்வழி - அவ்விடத்தில் (அந்நேரத்தில்); தங்கையும் - (இராவணன்) தங்கையாகிய சூர்ப்பணகையும்; தலையில் தாங்கிய செங்கையள் - தலை மேல் சுமந்த சிவந்த கையை உடையவளும்; சோரியின் தாரை - இரத்த வெள்ளத்தால்; சேந்து இழி கொங்கையள் - சிவந்து பெருகும் மார்பை உடையவளும்; மூக்கிலள் - மூக்கை இழந்தவளும்; குழையின் காதிலள் - குழையணிந்த காதுகளை இழந்தவளும்; மங்குலின் ஒலிபட - மேகத்தின் இடி முழக்கம் தோற்கும்படி; திறந்த வாயினள் - ஓலமிட்டுத் திறந்த வாயை உடையவளும். கொங்கை, மூக்கு, காது ஆகிய உறுப்புக்களை இலக்குவனால் இழந்த நிலை கூறப்படுகிறது. பொருள் அடுத்த பாடலில் முடிகிறது.24 |