3091. | முடையுடை வாயினள், முறையிட்டு, ஆர்த்து எழு கடையுகக் கடல் ஒலி காட்டக் காந்துவாள், குட திசைச் செக்கரின் சேந்த கூந்தலாள், வட திசை வாயிலின் வந்து தோன்றினாள். |
முடையுடை வாயினள் - முடை நாற்றம் வீசும் வாயினால்; முறையிட்டு ஆர்த்து - தன் குறையை உரக்கக் கூவுகின்றவளும்; எழு கடையுகக் கடல் ஒலி காட்ட - யுக முடிவில் எழும் கடலின் ஆரவாரம் செய்து; காந்துவாள் - மனம் எரிகின்றவளும்; குடதிசைக் செக்கரின் சேந்த கூந்தலாள் - மேற்குத் திசையிற் காணப்படும் அந்திச் செவ்வானம் போல் சிவந்த கூந்தலை உடையவளுமாய்; வடதிசை வாயிலின் வந்து தோன்றினாள் - வடக்குப் பக்கத்து அரண்மனை வாசலில் வந்து சேர்ந்தாள். இலங்கைக்கு வடக்கிலுள்ள தண்டக வனத்தில் சின்னா பின்னப்பட்டுச் சூர்ப்பணகை வருதலால் வடதிசை வாயிலில் புகுந்து வருதல் கூறினார்.25 |