3092.தோன்றலும், தொல் நகர்
     அரக்கர் தோகையர்
ஏன்று எதிர், வயிறு அலைத்து,
     இரங்கி ஏங்கினார்;
மூன்று உலகு உடையவன்
     தங்கை மூக்கு இலள்,
தான் தனியவள் வர,
     தரிக்க வல்லரோ?

    தோன்றலும் - (இவ்வாறு சூர்ப்பணகை) வந்து காட்சி தந்ததும்;
தொல் நகர் அரக்கர் தோகையர் - பழமையான இலங்கை நகரின் அசுர
குலப் பெண்கள்; ஏன்று - எதிர்கொண்டு; எதிர் - அவளெதிரில்; வயிறு
அலைத்து -
வயிற்றில் அடித்துக் கொண்டு; இரங்கி ஏங்கினார் - வருந்தி
அழுதனர்; மூன்று உலகு உடையவன் தங்கை - மூவுலகங்களுக்கும்
தலைவனான இராவணன் தங்கை; மூக்கு இலள் - மூக்கு இழந்தவளாய்;
தான் தனியவள் வர - தான் துணையின்றி வர; தரிக்க வல்லரோ? -
பொறுக்க இயல்பவராய் ஆவரோ?

     இது முதல் பத்தொன்பது பாடல்கள் அவள் நிலை கண்டு இலங்கை
மக்கள் உற்ற துயரைக் கூறுவனவாம். இது வரை காணாத ஒன்று
இலங்கையர் கோன் தங்கைக்கு நேர்தல் கண்டு அரக்கர் அதிர்ந்தனர்.26