3095. | 'செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர்? முப் புறத்து உலகமும் அடங்க மூடிய இப் புறத்து அண்டத்தோர்க்கு இயைவதுஅன்று இது; அப்புறத்து அண்டத்தோர் ஆர்?' என்றார் சிலர். |
செப்புறற்கு உரியவர் தெவ்வர் - குறித்துச் சொல்லத்தக்க பகைவர்; யார் உளர்? - (இராவணனுக்கு) யாவர் உள்ளார்?; முப்புறத்து உலகமும் அடங்க மூடிய - மூவகை உலகம் முற்றிலும் உள்ளடங்கும் படி கவிந்த; இப்புறத்து அண்டத்தோர்க்கு - இவ்வண்ட கோளத்தில் உள்ளவர்களுக்கு; இது இயைவது அன்று - இவ்வாறு செய்தல் சாத்தியமன்று; அப்புறத்து அண்டத்தோர் ஆர்? - வேறு அண்டத்தில் உள்ளவர் யார் இது செய்திருப்பார்?; என்றார் சிலர் - என்று பேசினர் சில அரக்கர்கள். அப்புறத்தண்டம் - பகிரண்டம், வெளியண்டம். 29 |