3096.'என்னையே! "இராவணன்
     தங்கை" என்றபின்,
"அன்னையே" என்று, அடி
     வணங்கல் அன்றியே,
உன்னவே ஒண்ணுமோ,
     ஒருவரால்? இவள்
தன்னையே அரிந்தனள்,
     தான்' என்றார் சிலர்.

    என்னையே - (இது) என்ன வியப்பு!; இராவணன் தங்கை
என்றபின் -
இராவணன் தங்கை இவளென உணர்த்திய பின்; அன்னையே
என்றடி வணங்கல் அன்றியே -
(யாவராயினும்) 'எம் தாயே' என்று
வழிபடுவதே அல்லாமல்; ஒருவரால் உன்னவே ஒண்ணுமோ? -
எவராலும் தீமை செய்ய நினைக்கவும் முடியுமோ?; (ஆதலால்); இவள்
தன்னையே தான் அரிந்தனள் -
இச்சூர்ப்பணகை தன்னைத் தானே
உறுப்புக்களை அறுத்துக் கொண்டாளாதல் வேண்டும்; என்றார் சிலர் -
என்று சில அரக்கர் கூறிக் கொண்டனர்.

     இராவணன் தங்கையென அறிந்தும் தீங்கு இழைப்பார் இரார் எனக்
கருதி இவ்வாறு உரைத்தனர்.                                    30