3098.'சொல்-பிறந்தார்க்கு இது
     துணிய ஒண்ணுமோ?
"இற்பிறந்தார் தமக்கு
     இயைவ செய்திலள்;
கற்பு இறந்தாள்" என,
     கரன்கொலாம் இவள்
பொற்பு அறையாக்கினன்போல்?'
     என்றார் சிலர்.

    சொல் பிறந்தார்க்கு - புகழ் உரைகள் கூறத்தக்க உயர் குடிப் பிறந்த
பெண்களுக்கு; இது - (கற்பழியும்) இச் செயல்; துணிய ஒண்ணுமோ? -
துணிந்து செய்யக் கூடியதாகுமோ?; அன்று (ஆதலால்) இற்பிறந்தார்
தமக்கு -
நற்குடிப் பிறந்தவர்களுக்கு; இயைவ செய்திலள் - பொருந்திய
செயல் இவள் செய்திலள்; கற்பு இறந்தாள் என - கற்பு நெறி தவறினாள்
என்று; இவள் பொற்பு அறை ஆக்கினன் போல் கரன் கொல் ஆம் -
கரன் இப் பெண்ணின் அழகை அழியும்படி செய்தான் போலும்; என்றார்
சிலர் -
எனச் சில அரக்கர் எண்ணினர்.

     இவள் ஒழுக்கக் கேடு கண்டு கரன் உறுப்பு அரிந்து தண்டித்தான்
என்று சிலர் கருதினர்.                                         32