3099.'தத்து உறு சிந்தையர்,
     தளரும் தேவர் இப்
பித்து உற வல்லரே?
     பிழைப்பு இல் சூழ்ச்சியார்,
முத் திறத்து உலகையும்
     முடிக்க எண்ணுவார்,
இத் திறம் புணர்த்தனர்'
     என்கின்றார் சிலர்.

    தத்து உறு சிந்தையர் - தடுமாறும் உள்ளம் கொண்டவர்களாய்;
தளரும் - சோர்ந்து போகிற; தேவர் இப் பித்துற வல்லரே -
தேவர்களில் எவரேனும் இத்தகைய பைத்தியக்காரச் செயலைச் செய்யவும்
துணிந்தனரோ?; பிழைப்பு இல் சூழ்ச்சியார் - (அவ்வாறு செய்திருப்பின்)
பிழைத்து வாழும் ஆலோசனை அற்றவர்களாய்; முத்திறத்து
உலகையும் முடிக்க எண்ணுவார் -
(தாம் மட்டுமன்றி) மூவகை
உலகங்களையும் அழித்தொழிக்க எண்ணியவர்களாய்; இத்திறம்
புணர்த்தனர் -
இவ்வாறு அழிவைத் தரும் செயல் செய்தனர் போலும்;
என்கின்றார் சிலர் - எனச் சில அரக்கர் கூறலாயினர்.

     பித்துற்றார் பேரழிவை அறியாராய் இவ்வாறு செய்திருக்கலாம் எனச்
சிலர் கருதினர்.                                              33