3101. கரை அரு திரு நகர்க்
     கருங் கண் நங்கைமார்
நிரை வளைத் தளிர்க் கரம்
     நெரித்து நோக்கினர்;
பிரை உறு பால் என,
     நிலையின் பின்றிய
உரையினர், ஒருவர்முன்
     ஒருவர் ஓடினார்.

    கரை அரு திரு நகர் - கடற் கரையில் அரிதின் அமைந்த செல்வம்
மிக்க இலங்கையின்; கருங்கண் நங்கைமார் - கரிய கண்கள் கொண்ட
அரக்கர் மாதர்; நிரை வளைத் தளிர்க் கரம் - வளையல் வரிசைகள்
பூண்ட தளிர்போன்ற மென் கரங்களை; நெரித்து நோக்கினர் - பிசைந்த
கோலத்தில் (சூர்ப்பணகையை) உற்று நோக்கினர்; பிரை உறு பால் என -
பிரை குத்திய பாலைப் போல; நிலையின் பின்றிய உரையினர் - இயல்பு
குலைந்த தடுமாறிய உரையினராக; ஒருவர் முன் ஒருவர் ஓடினார் -
(யாது நேருமோ என அஞ்சி) ஒருவருக்கு முன் ஒருவராக ஓடிச் சென்றனர்.

     கரைதல் சொல்லுதல் எனக் கொண்டு கரை அரு திருநகர் : புகழை
எடுத்துச் சொல்லுதலுக்கு அரிய செல்வ நகர் எனவும் கொள்ளலாம். (கரை-
முதனிலைத் தொழிற் பெயராகக் கொள்ளின் இப் பொருளாம்).         35